
பலரிடம் தோன்றி சிலரிடம் சென்றால் அதன் பெயர் கலையே இல்லை சிலரிடம் தோன்றி பலரிடம் சென்றால் அது கலை. ஒருவன் தன் உணர்ச்சிகளை கவிதை வடிவிலும் இன்னொருவன் இசை வடிவிலும் மற்றொருவன் சிற்ப வடிவிலும் வெளியிடுகின்றான். அதிலும் இசைக் கலைஞர்கள் கலையுலகில் திறமையை வெளிப்படுத்துவதோடு ரசிகர்களை மகிழ்வித்தும் வருகின்றனர். இத்தகைய கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். இசை என்பது ஒரு உலகப்பொது மொழியாக இருப்பதே இதற்குக் காரணம். இசை மக்களை இலகுவில் சென்றடைகின்றது. ஒரு சிறந்த கலைஞன் தன் திறமையை வெளிப்படுத்துவதற்கு ரசிகர்களே முழுமுதல் காரணகர்த்தாக்களாய் அமைகின்ற அதிலும் பெண்கள் நாதஸ்வர, தவில் வாத்தியங்களில் பெண் கலைஞர்களின் தொகை குறைவாக உள்ளபோதும் அவர்களுக்கு என அதிகளவான ரசிகர்கள் உள்ளனர். பெண்கள் நாதஸ்வரம் தவில் வாசிக்கின்றார்கள் என்றால் இரட்டிப்பான கூட்டம்கூடி இவ்விசையினை ரசிப்பர். அவ்வாறே நான் அண்மையில் சந்தித்த கலைச்சகோதரிகளும். திருநெல்வேலி கிழக்குபகுதியில் உள்ள பெண் நாதஸ்வர தவில் கலைஞர்களான சகோதரிகளுக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. பெண்களுக்கென தனித்திறமை படைத்தவர்கள் என்றால் இவர்களை சொல்லலாம்.

அக்கா திருமதி சுந்தரம் தையல்நாயகி நாதஸ்வர கலைஞராகவும் தங்கை திருமதி உதயகுமார் செல்வநாயகி தவில் கலைஞராகவும் உள்ளனர். யாழ் குடாநாட்டிலே கலைப் பாரம்பரியத்தின் தோற்றுவாயாக அமைந்த கலைக் குடும்பத்திலேயே கலைப்பணியாற்றுவதற்கென பிறந்த சகோதரிகள் இவர்கள். 1959 ம் ஆண்டு வைகாசிமாதம் 4ம் திகதி பிறந்த திருமதிசுந்தரம் தையல்நாயகி குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் தனக்கு இருந்த ஆர்வத்தினாலும் நாதஸ்வரத்தை கற்றுக்கொண்டார். அவரிடம் கேட்டபோது, “அம்மா நாதஸ்வரம் வாசிப்பார். எனக்கும் அவர் தான் குரு என்றவர் தனது குடும்பத்தை பறிறி சொல்ல ஆரம்பித்hர். இவரது பாட்டி முத்துலக்சுமி கோபாலும் நாதஸ்வரக் கலைஞர். அக்காலத்தில் அவரின் நிகழ்ச்சிக்கு பெரும்வரவேற்பு கிடைத்தது. தாயாரிடமே முழுமையாக இவர் இக்கலையை கற்றதோடு கல்வியங்காடு சிவஞானப்பிள்ளையார் ஆலயத்தில் தனது முதல் அரங்கேற்றத்தினை பத்துவயதில் செய்தார். அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் தாயாரோடும் ஏனைய குழுக்களுடனும் இணைந்து கோயில்களிலும் மங்கள நிகழ்வுகளிலும் இவர்களது கச்சேரி ஏராளம் நிகழ்ந்துள்ளன. யாழ்ப்பாணம் தவிர கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் வெளிநாடுகளுக்கும் போய் கச்சேரி செய்துள்ள இவருக்கு 2001 ஆம் ஆண்டு சுவிஸ் கரிச்முருகன் ஆலயம் “ஸ்வரதிலக பூபதி” என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தது. தையல் நாயகி தனது கணவர் சுந்தரத்துடன் இணைந்து பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளதுடன் இவரின் வாரிசுகளும் இக்கலையை பின்பற்றி வருகின்றனர். மகன் சசிக்குமார் நாதஸ்வரத்தையும் மற்ற மகன்களான சுரேஸ்குமார், சந்திரகுமார் தவில் கலையை முறைப்படி பயின்றுவருகின்றனர்.


இவரது சகோதரி உதயகுமார் செல்வநாயகியும் இவருக்கு சளைத்தவர் இல்லை 1963 ம் ஆண்டு புரட்டாதிமாதம் 2ம் திகதி பிறந்த இவர் தன் மாமனாரான சங்கரப்பிள்ளை முருகையாவிடம் தவில் கலையை நிறைவாகக் கற்று தனது தாயுடன் இணைந்து தழிழர் வாழும் இலங்கைத்தீவின் பல பாகங்களுக்கும் சென்று தன் பேராற்றலை வெளிப்படுத்தினார். இவரது கணவர் நல்லையா உதயகுமாரும் ஓரு தவில் கலைஞன். உதயகுமார் செல்வநாயகிக்கு சுவிஸ் பாசல்ஆலய நிர்வாகம் “தவில் தென்றல்” என்ற பட்டத்தினையும் 2001 ம் ஆண்டும் 2003 ம் ஆண்டும் சுவிஸ் நாட்டின் சூரிய மாநிலத்தில் உள்ள முருகன் கோயில் தேவஸ்தானத்தினர் கௌரவித்து ‘லயஞானபூபதி” எனும் பட்டம் வழங்கினர். இவரது மகன்மாரான உதயசங்கர், ஜெயசங்கர், விஜயசங்கர் ஆகியோர் நாதஸ்வரம் வாசிப்பதில் வல்லவர்களாக விளங்குகின்றனர். முன்னர் போன்று கலைகளை ரசிப்பதில் மக்கள் இப்போது ஆர்வம் காட்டுவதில்லை அல்லது நேரத்தைச் வெலவிடுவதில்லை. மேலும் அதிகரித்துள்ள வெளிநாட்டு மோகத்தினால் கலைஞர்கள வெளிநாடுகளுக்குச்சென்று குடியேறுவதும் கலைகளும் கலைஞர்களும் அருகி வரக் காரணம் என்கிறார்கள் இந்தக் கலைக் குடும்பத்தினர்;.