காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா சிறந்தது?




சில தலைப்புக்களை பற்றி பேசத் தோணாது. ஆனால் சில தலைப்புகளைப் பற்றி பேசாமல் இருக்கவே முடியாது. அது போல தான் இந்த தலைப்பும் இந்தக் காலத்தில் எந்த இளைஞனாலும் பேசாமல் இருக்கவே முடியாத தலைப்பு.






தற்கால குடும்ப ஒற்றுமையில் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா சிறந்தது?


அருமையான தலைப்பை தந்து ஆதாரங்களுடன் எடுத்துரைக்கச் சொன்ன நடுவருக்கு முதலில் என் நன்றிகள்.

முதலில் திருமணம் என்றால் என்ன என்று நோக்கினால் ஒரு சமூகசட்ட உறவு முறை என்று சொல்லலாம். இன்றைய கால கட்டத்தில் ஒரு மனிதன் முழுமையடைவது திருமணத்தில் தான. இதில் காதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா சிறந்தது? என்ற தலைப்பு எமக்கு கொடுக்கப்பட்டது இதில் எனது தெரிவு காதல் திருமணமே சிறந்தது என்பது தான்.

தற்போது இளசுகள் சிறுசுகள் செய்யும் பல காமவேலைகளும் தற்கொலைகளும் தான் காதல் என்று காதல் திருமணம் தவறென்று எதிரணியில் வாதாட வந்திருப்போரை நினைத்தால் சற்று வருத்தமாகதான் இருக்கிறது. இருப்பினும் எம்மை இவ்விடத்தில் நிலை நாட்டிக் கொள்ள அவர்களின் தொகை எமக்கு மிக முக்கியம்.

காதல் ஆதாம் ஏவால் காலத்தில் இருந்து எம்மோடு நடைபோடுகின்றது. என்பதை பல வரலாறுகள் கூறுகின்றது. அங்கிருந்தே பிரச்சினைகளும் இருந்துள்ளன அந்தக்கால காதலுக்கும் இந்தக்கால காதலுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. அவை காதல் காதலாக நகர்ந்தன. இப்போது காமத்துடனும் ஏமாற்றத்துடனும் நடைபோடுகின்றது.

7ம் 9ம் வகுப்புபடிக்கும் சிறுசுகள் தனியாகநின்று கதைத்தாலோ சிரிசிச்சுப்பேசினாலோ சுற்றி இருப்போர் சொல்லும் வார்த்தை இதுகள் பிஞ்சில பழுத்ததுகள், தாய் தகப்பனிட்ட சொல்லனும், இந்தவயசில் காதலும் கத்தரிக்காயும் என்று பலகதைகளை சொல்லி எதுவுமே இல்லாத நிலையில் அவையே அதை காதல் என்று நம்பும் ஒரு நிலையும் ஏற்படும் கேட்டால் முதல் காதல் என்று பெயர் வேறு.


அதிகம் பேச விரும்பவில்லை எமது தலைப்புக்குள் வருவோம் காதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா சிறந்தது? நிச்சயம் காதல் திருமணம் தான் என்று அடித்துக் கூறலாம் காரணம் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் போது இரு குடும்பங்களின் சாதி, குலம், கோத்திரம், மதம், ஜாதகம் இவைகளை மட்டும் தான் பார்ப்பார்கள்.

 ஒரு குடும்ப வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமானதல்ல பெற்றோர் பார்க்கும் திருமணம் என்பது ஒரு வீட்டிற்கு வெளிப்பூச்சு பூசுவதைப் போல் தான் வீட்டிற்குள் இருக்கும் எதுவும் தெரியாது திருமணம் முடிந்த பின்னர் சில நாட்களோ அல்லது சில காலம் கழித்து தான் தெரியவரும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலே ஓரளவு மட்டுமே பெண் பற்றியோ அல்லது ஆண் பற்றியோ விசாரிப்பார்கள் (என்னபடிப்பு? என்னஜாதி? சீதனம்?) திருமணம் முடிந்தபின் தான் இரண்டு தரப்பிலும் இருக்கும் பல உண்மைகள் வெளியில் தெரியவரும். அவ்வாறு தெரியவரும் போது இருவருக் கிடையிலும் விரிசல் ஏற்படும் அதிலும் தப்பித்தவறி வாழ்பவர்கள் அதை விதியென்று நினைப்பவர்களும், அம்மா அப்பா கஸ்ரப்பட்டு செய்துவைத்தார்கள் அல்லது போலிக் கௌரவம் என்று நினைப்பவர்களும்;, தண்ணிக்க குதிச்சாச்சு இனி நீந்தித்தானே ஆகணும் என்பவர்களும் பகலில வேலைக்குபோறம் இரவில் மட்டும் தானே சந்திக்கப்போறம் என்று சிந்திக்கிற விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருப்போர் மட்டும் தான் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் சேர்ந்திருப்பார்கள் மிச்சமெல்லாம் விவாகரத்து அல்லது பிரிந்திருப்பர்.

ஆனால் காதல் திருமணத்தில் அப்படியல்ல இருவர் பற்றிய புரிந்துணர்வு அதிகமாக இருக்கும் சிறு பிரச்சினை வந்தாலும் யார் முதலில் விட்டுக் கொடுப்பது பிரச்சினை எங்கு இருந்து ஆரம்பித்தது என்ற தெளிவு இருக்கும் அவள் அப்படிதான் அல்லது அவன் அப்படிதான் என்ற எப்படி எனும் தெளிவு இருக்கும். தமக்குள் ஏற்படும் எந்தப் பிரச்சனைக்குள்ளும் பெற்றோரோ அல்லது அடுத்தவர்களோ தீர்வுக்கு வருவதை விரும்பமாட்டார்கள் தம்மை தாமே சமாளித்துக் கொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக இருப்பர்.

அதிகமாக பலர் சொல்வது விவாகரத்தில் முடிவது காதல் திருமணம் என்று யார் சொன்னது காதல் திருமணம் என்று? அதிகமாக விவாகரத்தில் வந்து நிற்பது இளவயதுத்திருமணம் தான் அதிகபிரிவினை ஏற்படுத்துகின்றது.

காதலிப்பவர்கள் என்று இனங்காணப்படுவோர் செய்யும் வேலை என்னவென்றால் தம்மை தாம் முழமையாக அறிந்து கொள்ள முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனர் ஒருவரை புரிந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதல்ல காதலிக்க ஆரம்பித்ததும் செய்யும் திருமணத்திற்கும் நிச்யிக்கப்பட்ட திருமணத்திற்கும் எந்த வித்தியாசமும் பெரிதாக இருப்பதில்லை.

இன்றைய காதல் தோல்விக்கு மிகமுக்கிய காரணம் வெளிநாட்டு மோகம் என்றும் சொல்லலாம் இருவரும் படிக்கும் வரையோ அல்லது வேலைக்கு போகும் வரையோ சேர்ந்து திரிவது இதற்கு ஊர் உலகம் கொடுக்கும் பெயர் காதல் பின் வீட்டில் வாழ்க்கை பற்றிய முடிவு எடுக்கும் போது பெண் என்றால் 95வீதம் வெளிநாட்டிலே தேடுவார்கள் அவளும் அதற்கு சம்மதித்து வெளிநாடு சென்று விடுவாள். இங்கு ஆண்கள் நாலு காதல் கவிதை எழுதி தாடியுடன் சுற்றித்திரிவர் யாராவது கேட்டால் அதில் ஒரு வீராப்பு வசனம் வேறு பொண்ணுங்களே இப்படிதான் ஏமாத்துங்கள் தாங்கள் செய்தது காதல் தானோ என்ற கேள்வி அவர்களுக்கு ஒரு குடும்பம் என்ற ஒன்று வரும் வரை முக்கியமாக தாங்களும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் வரை தெரியவே போவதில்லை.

காலில் தோற்ற ஆண்களிடம் சென்று கேட்டால் அவளுக்கு என்னை பிடிக்கலையாம். அவள்டவீட்ட காதல் திருமணத்த ஏத்துக்க மாட்டாங்களாம் என்டு தான் கடைசியா பேசும் போது சொன்னாள். நான் வடிவில்லையாம். என்னிடம் பணம் இல்லையாம் என பல காரணம் சொல்வார்கள். இதைவிட காதலில் தோற்ற பெண்களிடம் கேட்டால் ஆண் வர்க்கமே கேவலப்படும் சம்பவங்கள் பல நடந்திருக்கும் ஆனால் அவை பெரிதாக தெரியாது. பெண்கள் தம்மைகாத்துக் கொள்ள வருங்காலத்தை அவமதிக்காமல் இருக்க அவை மறைக்கப்பட்டதாக இருக்கும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிசம உரிமை கொடுக்கப்பட்டது போல் அவர்களது கருத்துக்கு சம உரிமை பார்வை கொடுக்கப்பட்டால் ஆண்கள் நிச்சயம் புடவைதான் கட்டநேரிடும்.

காதலுக்கு மறு பெயர் ஆழமான புரிந்துணர்வு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்பது எனது சொந்தக்கருத்து ஒரு பெண் 28 வயதிலும் ஒரு ஆண் 30 வயதிலும் திருமணம் என்ற காலத்துக்குள் அடியெடுத்துவைக்கும் போதுகாதல் திருமணம் சிறந்தது என்பதை அவர்களே புரிந்து கொள்வர். காதல் 5 அல்லது 6 வருடம் தொடர்ந்தால் தவறு என்னவாக இருக்கும் என்பது புரியாத ஒன்று.

ஒருவரை காதலித்து இன்னொருவரை ஏற்க முடியாமல் தவிக்கும் இடத்தில் நிச்சயம் உண்மையான காதல் இருக்கும் ஆனால் தற்காலத்தில் அப்படி சொல்ல முடியாது. ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாதது தான் காதல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தற்போதைய காதல்கள் தற்கொலையில் முடியக்காரணம் காதல் தோல்வி அல்ல ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமையும் அதை வெளியில் சொல்ல முடியாத வெட்கமும் என்று தான் சொல்ல வேண்டும். இது தான் காதல் என்றால் எதிரணியில் வாதாட வந்திருப்போரை நான் வரவேற்கிறேன் முதலில் காதல் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் பிறகு எதிர்த்து வாதாடுவதை பற்றி சிந்திக்கலாம்.


நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் எத்தனை பெண்கள் கணவனை அனுசரித்துப் போகின்றனர் கணவனின் பெற்றோரை சகோதரத்தை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல முதல் உரிமை எப்போதும் பெற்றோருக்கே கொடுக்கப்படும் பெற்றோர் பக்கமே அதிகம் சார்ந்திருப்பர் காரணம் கேட்டால் இவள் நேற்றுவந்தவள் தானே எனக்கு பெற்றோர் தான் முக்கியம் என்பர்.

ஆண் பெண் மனங்கள் விருப்பு வெறுப்பு என்பன ஒரே மாதிரி தான் படைக்கப்பட்டது ஆனால் பெண்களுக்கென வந்த பல அடக்கு முறைகள் இன்னும் வாழ்ந்துதான் வருகின்றது. அந்த முறை நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றவுடன் கட்டாயம் தலை தூக்கத் தொடங்கும் பெண் தமது விருப்பங்களை சொல்லமுடியுமே தவிர அவை ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லது ஆண் பெண்ணுக்கு அடிமையாக இருக்கும் காரணம் கேட்டால் இவன் சீதனம் வாங்கித்தானே செய்தவன் இவனுக்கு நான் என்ன மரியாதை கொடுக்கவேண்டும் என்பர்.

இத் தலைப்புக்கு நான் நினைப்பது இதில் தற்தோதைய இளைஞர்களின் சொந்தக்கருத்துக்களை கேட்பதைவிட அவர்களது அம்மா அப்பாக்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையையும் அவர்களது காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்ற வினாக்களை கேட்கும் போது இதற்கு சரியான பதில் கிடைக்கும். சில இடங்களில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் நடந்திருக்கும் அங்கு அம்மா அப்பாக்களுக்கிடையிலான பேச்சுவார்ததை கிடையாது. நடுவில் பிள்ளைகள் தான் இருப்பார்கள் அப்பா சொல்வார் ஏதும் ஒரு சம்பவத்தை சொல்லிவிட்டு இதை அம்மாட்ட சொல்லு அதற்கு அம்மா மட்டும் சளைத்தவர் இல்லை சமைச்சாச்சு சாப்பிட்டு போகச் சொல்லு இதுக்க பிள்ளையள் பாடு பெரும் திண்டாட்டம் தான்.

காதல் திருமணத்தில் பெரும்பாலும் பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியமும் திறமையும் அவர்களிடம் இருக்கும் காரணம் விரும்பிதானே செய்தாய் உன் பிரச்சனையை நீ பார்த்துக்கொள் என்று பெற்றோர் சொல்வது. காதல் திருமணத்தை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாமையால் பிரிந்துபோகும் எத்தனையோ காதல் இன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன பெற்றோர் ஏற்றுக்கொள்ளாமை என்பது தவறு  காதலை சரியானமுறையில் எடுத்துரைக்கவில்லை அல்லது நீங்கள் தெரிவு செய்த நபர் உங்களுக்கு பொருத்தமானவர் இல்லை என்றும் சொல்லலாம் காதலில் நமது தெரிவு தவறாக இருக்கும் படசத்தில் வேறு வழி கிடைப்பதில்லை.

ஏந்தப்பெற்றோரும் முதலில் காதல் திருமணத்தை ஏற்காவிட்டாலும் பின் அதை ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வருவார்கள் காரணம் எந்த பிள்ளைகளும் கஸ்ரப்படும் போது பெத்தவங்க சந்தோசப்படப்போவதில்லை எமது தெரிவு சரியானதாக நல்லதாக இருக்கும் பட்சத்தில் முதலில் எதிர்த்தாலும் பிறகு ஏற்கும் மனநிலைக்கு பெற்றோர்கள் வருவார்கள். எனவே எனது தெரிவு காதல் திருமணமே சிறந்தது என்பது தான்.

இது பட்டிமன்றத்திற்கு கொடுக்கப்பட்ட இரு தலைப்பில் ஒன்றை தெரிவு செய்து வாதாட வேண்டுமென்பதற்காக எடுத்த தலைப்பு மற்றபடி சொந்தக்கருத்து எதுவும் கிடையாது எந்த திருமணமாக இருந்தாலும் சரியான புரிந்துணர்வும் விட்டுக்கொடுக்கும் மனநிலையும் இருந்தால் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.




 
 
 

உலகச் செய்திகள்

சினிமா செய்திகள்

அறிவியல்..